இலங்கையில் ஆழிப்பேரலை ஏற்பட்டு நாளையுடன் 18 வருடங்கள் நிறைவு

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவு கூறும் வகையில் நாளை (26) காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை அறிவித்துள்ளது.

இலங்கையில் ஆழிப்பேரலை ஏற்பட்டு நாளையுடன் 18 வருடங்கள் நிறைவு பெறுகிறது. அனர்த்தத்தினால் நாட்டின் 14 கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 35,000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5,000 பேர் காணாமல் போயுள்ளனர். மற்றும் 34 பிரதேச செயலகங்களில் உள்ள 235,145 குடும்பங்களைச் சேர்ந்த 502,456 பேர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், "தேசிய துக்க தினம்" நாளை கொண்டாடப்படுகிறது. மாவட்ட மட்டத்தில் இதற்காக பல்வேறு நினைவு கூறும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

காலி பறலிய சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக பிரதான வைபவம் இடம்பெறவுள்ளது.


இந்நாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூறும் வகையில் தேசிய துக்க தின வேலைத்திட்டம் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்கோன் மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படையினர், காவல்துறையினர் மற்றும் சுற்றுவட்டார சமூகத்தினர் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
புதியது பழையவை