மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாரிய முரண்பாடுகளுக்கு மத்தியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் பாதீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஒரு வெளிநடப்பு செய்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தவிசாளர் சோமசுந்தரம் சற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இன்றைய சபை அமர்வின் போது அடுத்த ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் உரிய முறையில் பாதீடு தயாரித்து உறுப்பினர்களிடம் வழங்கவில்லை என உறுப்பினர்களினால் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் உரிய முறையில் பாதீடு வழங்காமையினால் பாதீட்டை நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லை எனவும் உரிய முறையில் பாதீட்டை 14 நாட்களுக்குள் சீரமைத்து விசேட அமர்வினை வைத்து பாதீட்டை நிறைவேற்றவேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்து பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
அத்தோடு 2022ம் ஆண்டு பாதீட்டில் குறிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் நடைபெறாத நிலையில் காணப்படுவதுடன் சில வேலைத்திட்டங்கள் சபையில் அனுமதியில்லாமல் இடம்பெறுவதாகவும் ஊழல்கள் அதிகளவில் இடம்பெறுவதாகவும் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து எதிர்வரும் வருடம் வட்டாரத்திற்கான நிதி ஒதுக்கீடானது 21 உறுப்பினர்கள் ரீதியாக பகிரப்படவேண்டும் என்ற கோரிக்கை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டு உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று இக்கோரிக்கை தவிசாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் திருத்திய பாதீட்டை சில நாட்களுக்குள் சபையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் வட்டாரங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அனைத்து உறுப்பினர்களுக்கு பங்கீடு செய்வதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பாதீட்டிற்கு எதிர்ப்பினை தெரிவித்து வரவு செலவு திட்ட அமர்விலிருந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து சபையிலிருந்த 20 உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் அது தொடர்பான அறிவிப்பனை தவிசாளர் விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து உறுப்பினர் வினோராஜ்ஜினால் 1988ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி வேண்டும் எனவும் கடந்தகாலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற படுகொலைகள் என்பவற்றுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் அது தொடர்பில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதால் சபையினை முடிவுக்கு கொண்டுவருவதாக தவிசாளர் சபை அமர்வினை முடிவுக்கு கொண்டுவந்த பின்னரும் உறுப்பினர்களிடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.