மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மீன்பிடிக்கச்சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
போரதீவுப்பற்று, 35ம் கிராமம் கண்ணபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் அன்னபுத்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
35ம் கிராமம் கண்ணபுரம் பகுதியுள்ள நவகிரி ஆற்று பகுதியில் வயல் வேலைகள் செய்துகொண்டிருந்தவர் நவகிரி ஆற்று பகுதியில் மீன்பிடியிலும் ஈடுபட்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
வயலுக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்களாலும் கிராம வாசிகளாலும் தேடப்பட்டுவந்த நிலையில் சடலமாக நீரோடையில் கிடப்பதாக அப்பகுதிக்கு சென்றவர்களினால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.