நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் மரணமடைந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் குழுவொன்று நுவரெலியாவிற்கு வருடாந்த கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பேருந்து எதிரே வந்த வேன் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதியதோடு 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
இவ்விபத்தில் 6 பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவும் 42 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது பேருந்தில் 44 மாணவர்கள் பயணித்துள்ளதாகவும், 41 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை விரைவில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.


