மட்டக்களப்பில் மண்கௌவுமா தமிழரசுக் கட்சி? களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்



இலங்கையில் உள்ளூராட்சிசபைத் தேர்தல் ஆரவாங்கள் தொடங்கிவிட்டுள்ள நிலையில் ஆரம்பகட்ட கள ஆய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது எமது செய்திப் பிரிவு.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் கல்விமான்கள், சமூகத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், வர்த்தகர்கள், சாமானிய மக்கள் என்று பல்வேறு தரப்பினரிடையே மேற்கொள்ளப்பட்டுவருகின்ற தேர்தல் கால ஆரம்பகட்டக்கணிப்புக்களை எமது தளங்களில் தர இருக்கின்றோம்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலவரத்தினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம்.


' இவனுகளுக்கு இந்தமுறை ஒரு பாடம் கற்பிக்கத்தான் வேண்டும்..', 'ஒருக்கா அடி வாங்கினாத்தான் இந்தக் கட்சி திருந்தும்..' மட்டக்களப்பில் அதிகூடிய மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த தமிழரசுக்கட்சி பற்றி அந்தக் கட்சியின் அதிதீவிர ஆதவாளர்கள் பலவது கருத்து இப்படிப்பட்டதாககத்தான் இருக்கின்றது.

தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும், கல்விமானும், அந்தக் கட்சியில் ஒரு தடவை தேர்தலில் போட்டியிட்டவருமான ஒரு மூத்த அரசியல்வாதி கருத்துத் தெரிவிக்கும்போது, 'தமிழரசுக் கட்சி எந்த நோக்கதிற்காக உருவாக்கப்படடதோ அந்த நோக்கத்தை அப்படியோ கைவிட்டுவிட்டு அந்தக் கட்சி வேறு யாரோ ஒருவர் வழிகாட்டும் பாதையில் பயணிக்க ஆரம்பித்து வெகுநாட்களாகிவிட்டன. தமிழ் நலன்சார்ந்து அவர்கள் சிந்திப்பதேயில்லை. எங்களைப் போன்ற சிரேஷ்ட தலைவர்கள், தமிழரசுக்கட்சிக்காக பல தீயாகங்களைச் செய்தவர்கள் எல்லாம் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு வருகின்றார்கள். 'தமிழ் தேசிம்' என்ற சொல்லாடல் திட்டமிட்டு ஓரங்கப்பட்டப்பட்டு வருகின்றது. தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர்கக்கு மாத்திரமே உரிய ஒரு கட்சியாக மாறிவருகின்றது' என்று தெரிவித்தார்.

கடந்த தேர்தல்வரை மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் இலைமறை காயாக இருந்து கட்சியின் செயற்பாட்டிற்கு திரைமறைவில் இயங்கி வந்த ஒரு இளம் சமூகத் தலைவரின் பெயர் டானியல் பாக்கியம். தமிழரசுக் கட்சிக்காக அர்பணிப்புகளோடு நின்று போராடிய ஒருவர். சமூகத்தில் நன்கு அறிமுகமுள்ள பெரிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியில் மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் இவர் போட்டியிடப்போவதாகக் கிடைத்த தகவலை அடுத்து அவரைத் தொடர்புகொண்டபோது, அவரது பதில் இப்படிப்பட்டதாக இருந்தது:


' தமிழரசுக் கட்சி தனது சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, தமிழ் மக்களின் நம்பிக்கையை விட்டு முற்றாகவே விலகிச்சென்று பல நாட்களாகிவிட்டன. ஒரு காலத்தில் தமிழ் மக்களின் ஆத்மாத்தமான கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சி தற்பொழுது தனி நபர்கள் சிலரது சொந்தக் கட்சியாகத்தான் செயற்பட்டுவருகின்றது. தமிழரசுக் கட்சியின் அத்தனை செயற்பாடுகளையும் ஓரிருவர்தான் எடுத்துவருகின்றார்கள். அப்படி தீர்மானம் எடுக்கும் யாருமே தமிழரசுக் கட்சியின் உண்மையான கொள்கையை அறியாதவர்கள். அதுபற்றி நுனிப்புல் கூட மேயாதவர்கள். மக்களை அரசியல்மயப்படுத்தவேண்டும் என்று பல தடவைகள் கோரியிருந்தோம். ஆனால் மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் கட்சியில் சில தலைவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள். மக்களது பிரச்சனைகள் சார்ந்து செயற்படும் பாதையைவிட்டு தமிழரசுக் கட்சி விலகி பல நாட்களாகிவிட்டன. தமிழரசுக் கட்சிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு ஏதுவுமே செய்யமுடியாது என்று நன்றாக உணர்ந்துகொண்டதால்தான், அதில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்தேன். என்னைப்போல பல இளைஞர்கள் அந்தக் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றார்கள். சிலர் வெளிப்படையாகவும் பலர் மறைமுகமாகவும் தமது அதிருப்தியை காண்பித்து வருகின்றனர். அக்கட்சியில் மாற்றுக்கருத்துள்ளவர்களை ஓரங்கட்டி ஆமா சாமி போடுபவர்கள் மட்டும்தான் அந்தக் கட்சியில் இனி இருக்கமுடியும்' என ஆதங்கத்தோடு இவ்வாறு தெரிவித்தார்.


மேலும், அக்கட்சியானது புதியவர்களை, இளையவர்களை அரசியலில் இணைத்து கொள்வதில் மிகவும் பின்நிற்பதாகவும் தனது கவலையினைத் தெரிவித்தார்.


கிழக்கு பிரதேசத்தை மையப்படுத்திய அரசியலைச் செய்துவரும் பிள்ளையான் தலைமையிலான TMVP கட்சியின் மட்டக்களப்பு நகர மேயராகப் போட்டியிடப்போகும் சுரேஷ் என்ற இளைஞன் தமிழரசுக் கட்சியின் ஒரு தீவிர ஆதரவாளர்.

புலம்பெயர் நாடொன்றில் இருந்து திரும்பிச் சென்று தமிழரசுக் கட்சிக்காகத் துடிப்புடன் செய்பட்டுவந்தவர். வளர்ந்துவரும் தொழிலதிபர். எதற்காக தமிழரசுக் கட்சியை விட்டுவிட்டு TMVP கட்சிக்கு சென்றீர்கள் என்று எமது செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்:


'கிழக்கு மாகாணத்திற்கென்று தனித்துவமான சில பிரச்சனைகள் இக்கின்றன. காணிப்பிரச்சனைகள், எல்லைப் பிரச்சனைகள், மாற்றுச் சமூகங்களின் பொருளாதார அச்சுறுத்தல்கள்.. இப்படி பல பிரச்சனைகள் இருக்கின்றன. கிழக்குவாழ் தமிழ் மக்களின் அந்த தனித்துவமான பிரச்சனைகளை மையப்படுத்திய எந்தச் செயற்திட்டமும் தமிழரசுக் கட்சியிடம் கிடையாது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுடன் போட்டியிட்டுவரும் முஸ்லிம் சமூகம் தேர்தல் என்று வந்ததும் ஒரே அணியில் திரள்கின்றார்கள். ஹிஸ்புல்லா முஸ்லிம் காங்கிரசில் இணைந்துவிட்டார். மௌலானா முஸ்லிம் காங்கிரசில் இணைகின்றார். தங்களுடைய சமூகம் என்று வந்ததும் ஒரேஅணியில் ஒன்றுபடும் ஒரு தூரநோக்கை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கின்ற அதேவேளை, தமிழரசுக் கட்சியோ தமிழ் மக்களின் ஒன்றுமையை எந்த அளவுக்கு பலவீனமாக்க முடியுமோ அந்த அளவுக்கு பலவீனமாக்கி வருகின்றது. 

கிழக்கு மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக கட்சி மாத்திரமல்ல, குறைந்தது அதனைப் புரிந்துகொள்வதற்கான கட்சிகூட தமிழரசுக் கட்சி அல்ல என்று நன்றாகத் தெரிந்துகொண்டதால்தான் நான் தமிழரசுக் கட்சியை விட்டுப் பிரிந்து TMVP இல் இணைந்தேன். இம்முறை நிச்சயம் நான்தான் மட்டக்களப்பின் மேயராவேன்' என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.


தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் கூறும்போது, 'மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றது என்பது உண்மைதான். ஒரு தேர்தலை எதிர்கொளும் நிலையில் நாங்கள் இல்லை. 'மக்களுக்காக இதைச் செய்தோம்.'. 'அதைச் செய்தோம்' என்று கூறிக்கொள்வதற்கான எந்த பெறுபேறுகளும் எங்களிடம் இல்லை. ஏனென்றால் நாங்கள் எதுவுமே செய்யவில்லை. ஓர் இரு தனிப்பட்ட நபர்களை மாத்திரம் சுற்றிசுற்றித்தான் கட்சி சுழண்டுகொண்டிருக்கின்றது. அவர்களுடைய நாடாளுமன்ற உரைகள் மாத்திரம்தான் கடந்த 10 வருட காலத்தில் தமிழரசுக் கட்சியின் முதலீடுகள். வேறு எந்தச் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடவில்லை. இந்த உள்ளூரட்சிசபைத் தேர்தல் முடிவாவது எமது கட்சியை திருத்தவேண்டும்' என்று விரகத்தியாகத் தெரிவித்தார்.


"கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கின்றோம். ஆனாலும் எமது மக்கள் கடைசியில் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். அதனைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை" என்று தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.

'தமிரசுக் கட்சியின் போக்கை மாற்றவேண்டிய, தமிழரசுக் கட்சியை சிட்சித்து திருத்தவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து தனது செல்லப்பிள்ளையான தமிழரசுக் கட்சியை கண்டித்து, தண்டித்து. திருத்தி ஒரு வழிக்குக்கொண்டுவரவேண்டிய ஒரு நல்ல சந்தர்ப்பம் இந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல். மக்கள் அதனைச் செய்யவேண்டும். அடுத்த தேர்தலில் ஒன்றுபட்ட ஒரு தமிழ் அரசியல்பலம் வெளிப்பட்டுநிற்கவேண்டுமானால், இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தண்டிக்கப்படுவது அவசியம்.

 இரக்கம் பார்க்காமல் மக்கள் அதனைச் செய்யவேண்டும். அதுதான் தமிழரசுக் கட்சியின் பாதையை செப்பனிட சிறந்த வழி' என்று தெரிவித்தார், தனது பெயரைக் குறிப்பிடவேண்டம் என்று கூறியபடி ஒரு கத்தோலிக்கத் துறவி.

இன்னும் வரும்...
புதியது பழையவை