பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சாரம் - வெளிவந்த அறிவிப்பு



இன்று அல்லது நாளை முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல்வேறு தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்போது, உயர்தரப் பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்ததாக அவர் கூறினார்.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் அனைத்து தரப்பினரும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

பரீட்சைகளின் போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை