உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் அலுவலர்களுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் வழிகாட்டுதலில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சுபியான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தல் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளரினால் தெளிவுபடுத்தப்பட்டத்துடன் ,வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதியில் வீதி ஒழுங்கு மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் பாதுகாப்பு அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் வேட்புமனுக்களை ஒப்படைக்கும் போது வாகனங்கள் உள்நுழைதல் ,வெளிச்செல்லுதல், மற்றும் வேட்புமனுவை ஒப்படைக்கும் நபர்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எதிர்வரும் 18ஆம் திகதியிலிருந்து இறுதி நாளான 21ஆம் திகதி வரை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன், மட்டக்களப்பு தேர்தல் அலுவகத்திற்கு முன்னாள் பொலிஸ் தற்காலிக சோதனை சாவடி அமைப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஆர். குமாரசிறி தலைமையிலான பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.