மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழுவினர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த குழுவினரை மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பெருமளவான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மூன்றாம் திகதி இரவு மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமப் பகுதியில் வசிக்கும் பொது சுகாதார பரிசோதகர் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்த 17 முக்கால் பவுன் பெருமதியுள்ள தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

மட்டக்களப்பு கொக்குவில் போலீஸ் பொறுப்பதிகாரி விமலரெட்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் 33, 34, 44 வயது மதிக்கத்தக்க மூவரை கைது செய்துள்ளதுடன் பொதுச் சுகாதார பரிசோதகர் வீட்டில் களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கொள்ளையர்கள் மிக நுட்பமான முறையில் திருடிவந்துள்ளதாகவும் அவர்கள் கொள்ளைகளுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பனவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் திராய்மடுபகுதியில் திருடப்பட்ட பொருட்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை