அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்



அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற நிலையில், புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிடமாகி இருந்த நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான
இக்கூட்ட அமர்விற்கு 13 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

கூட்டத்திற்கு தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடாத்துவதாக அறிவித்த உள்ளூராட்சி ஆணையாளர் புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

மூவரின் பெயர் தவிசாளர் தெரிவிற்கு பிரேரிக்கப்பட்டன. இதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் கோரப்பட்டது. இதன்போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.


இதனடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பின் அடிப்படையில் இடம்பெற்றது.
முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளைப் பெற்ற திருமேனி யோகநாதன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு ஏனைய இரு போட்டியாளர்களான அந்தோனி சுதர்சன் மற்றும் சிவலிங்கம் குணரட்னம் ஆகிய இருவரில் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கு மீண்டும் இரண்டாவதாக பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.

பகிரங்க வாக்கெடுப்பில் அந்தோனி சுதர்சனுக்கு 7 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவலிங்கம் குணரெத்தினம் 4 வாக்குகளையும் பெற்றார்.

இதனடிப்படையில் மூன்று மேலதிக வாக்குகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அந்தோனி சுதர்சன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
புதியது பழையவை