வைத்தியசாலைக்குள் வன்முறை கும்பல் வாள்வெட்டு!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்ற இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.


பட்டா வாகனத்தில் வந்த சிலர், போதனா வைத்தியசாலையின் பிரேத அறை அமைந்துள்ள பகுதியின் நுழைவாயில் கதவால் ஏறி வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனர்.



இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவர்களை தடுத்துள்ளார். அதனையடுத்து, காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட காவலாளி அவர்களை தடுக்க முயன்றுள்ளார். இவ்வாறான நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


புதியது பழையவை