கிளிநொச்சி ஏ-35 வீதியில் இன்று(25) இடம்பெற்ற விபத்தில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் கிளிநொச்சி ஏ-35 வீதி கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கித் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த உயிரிழந்த முதியவர், அவ்வீதியில் நெல் உலரவிடப் பட்டிருந்த நிலையில், அதனை விலத்தி அருகினால் சென்றுகொண்டிருந்ததாகவும், இதன்போது முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த பாரவூர்தி அவரை மோதியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
உயிரிழந்தவர் வட்டக்கச்சிப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நெல் அறுவடையில் ஈடுபடும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள், நெல் அறுவடையின் பின்னர் அப் பகுதிகளில் போதிய உலர்தளங்கள் இல்லாத காரணத்தினால், காப்பட் இடப்பட்ட பிரதான வீதிகளில் தமது நெல்களை உலர விடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவ்வீதிகளில் விபத்துக்கள் சம்பவிக்கும் நிலை அதிகரித்துள்ளது.
அண்மையில் பரந்தன்-சங்குப்பிட்டி வீதியிலும் இவ்வாறான விபத்தொன்று இடம்பெற்றிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.