மகளீரணியின் கோரிக்கையால் டெலோவுக்கு நெருக்கடி!!
இலங்கையின் ன் 75வது சுதந்திரதினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழரசுக் கட்சியினால் நடாத்தப்பட்ட கண்டணக் கூட்டத்தில், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட 'விஜி' என்ற மாணவி ஒருவரின் படுகொலை மீது விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை தமிழரசுக் கட்சியின் மகளீர் அணியினால் முன்வைக்கப்பட்டது.

பொது மேடையில் வைத்து அந்த வேண்டுகோள் தமிழரசுக்கட்சியின் மகளீர் அணியினால் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு பெண்ணை அடையாளமாகச் சுமந்துகொண்டுவந்து அந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள்.

கொல்லப்பட்ட அந்த மாணவியின் பெயர் நல்லதம்பி அனுசியா. வீட்டில் அவரை விஜி என்றுதான் அழைப்பார்கள்.

மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த அவர் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பாடசாலையில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தார்.


விஜியினுடைய அம்மாவின் தம்பி விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு மாவீரராகியிருந்தார்.


இந்த விஜிதான் 01.12.1990 அன்று கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டிருந்தார்.

ஆரையம்பதியிலுள்ள ஒரு தனியார் கல்விக்கூடத்தில் வைத்து ஐந்து டெலோ உறுப்பினர்கள் என்று சந்தேகப்படுபவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் மட்டக்களப்பு வாவியில் எறியப்பட்டிருந்ததாக ஆரையம்பதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

மாணவி மீது புரியப்பட்ட அந்த கொடூரச் செயலுக்காக ஐந்து டெலோ உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மரணதண்டனை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


ஆரையம்பதி பிரதேசசபை தவிசாளரான ரொபர்ட், தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் உறுப்பினரொருவரின் உடன்பிறந்த சகோதரனான கோவிந்தன் கருணாநிதி, காகாங்கேயன் ஓடையைச் சேர்ந்த அன்வர், மற்றும் வெள்ளை என்பவர்கள் உட்பட ஐவருக்கு அப்பொழுது மரணதண்டனை விதிக்கப்பட்டதாக பேச்சடிபட்டது.

அந்த நேரத்தில் டெலோவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இருந்த ஜனா மீதும் மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவையெல்லாம் ஊரறிந்த சம்பவம்.

வடக்கு கிழக்கில் கடுமையான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த கரணத்தினாலும், டெலோ அந்தக் காலகட்டத்தில் சிறிலங்காப்படையின் கைக்கூலியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த காரணத்தினாலும், விசாரணைகளோ அல்லது குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கையையோ யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.

இந்த விஜி என்ற மாணவியின் படுகொலை பற்றிய விசாரணையைக் கோரித்தான் தமிழரசுக்கட்சியின் மகளீரணி தற்பொழுது சுமந்திரனிடம் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது.


ஒருவேளை விசாரனை முன்னெடுக்கப்பட்டால் சாட்சி கூறுவதற்கு ஏராளமானவர்கள் தற்பொழுதும் காத்துக்கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது.

மிக முக்கியமாக அப்படி ஒரு விசாரணை முன்வைக்கப்படுமாக இருந்தால், மட்டக்களப்பு டெலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாவுக்கு அரசியல் ரீதியாக பலத்த நெருக்கடி ஏற்படும் என்பதுடன், இந்தியப்படை காலத்திலும், 90களிலும் டெலோ உறுப்பினர்கள் புரிந்த பல படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்து அரசியல் அரங்கில் டெலோவுக்கு பாரிய தர்மசங்கடங்கள் ஏற்படும் என்றும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

புதியது பழையவை