உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கு சாத்தியம் இல்லை எனவும், அதற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் விசேட ஆணையாளர்களுக்கு கீழ் கொண்டுவரப்படும் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருடத்திற்கு பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரக் காலம் மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளதால், மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை அரசாங்கம் வழங்காததன் காரணமாக தேர்தல் பிற்போடப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மார்ச் 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரக்காலம் நிறைவுக்கு வருகிறது.
எனவே, தேர்தலொன்று நடைபெறும் வரையில் மாநகர சபைகளை நகர ஆணையாளர்களுக்கு கீழும், நகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கான அதிகாரங்களை பிரதேச சபை செயலாளர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆணையாளர்களின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் கொண்டுவரும் பட்சத்தில் தற்போதைய உறுப்பினர்களின் பதவிகள் செயலிழக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.