தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுப்பு - கோவிந்தன் கருணாகரம்



நீதிமன்ற உத்தரவினையும் மீறிய வகையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேய்ச்சல் தரை பகுதியாக காணப்படும் மயிலத்தமடு,மாதவனை ஆகிய பகுதிகளில் நிலைமைகளை கண்டறிவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பகுதிக்கு கள விஜயத்தினை முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈபிஆர்எல்எப் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,புளோட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.கேசவன் உட்பட பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

கடந்த சில தினங்களாக மயிலத்தமடு,மாதவனை பகுதியில் வேறு மாவட்டங்களிலிருந்து வருவோர் அத்துமீறிய பயிர்ச்செய்கையினை முன்னெடுத்துவரும் நிலையில் கடந்த சில தினங்களாக மேய்ச்சல் தரையில் உள்ள மாடுகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களில்மாடொன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் , ஐந்து மாடுகள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் நேற்றைய தினம் ஒருவர் கரடியனாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டபோதிலும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் கருணாகரம் எம்.பி.இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.



புதியது பழையவை