மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துறை திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா இன்று இடம்பெற்றது.
விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் நெல் அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூன்று தசாப்த காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த குறித்த 23 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பண்ணையில் கடந்த சில வருடங்களாக வேளாண்மையும் ஏனைய பயிர்ச்செய்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல்தெனியவின் ஆலோசனைக்கு அமைவாகவும், சிறைச்சாலை திணைக்களத்தின் வழங்கள் பிரிவின் ஆணையாளரின் வழிகாட்டல்களுக்கு அமைவாகவும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந.பிரபாகரனின் தலைமையில் 10 ஏக்கரில் நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டு, இன்று அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.
சம்பா வகை நெல்லினம் இம்முறை விதைக்கப்பட்டிருந்ததுடன், சிறந்த விளைச்சலும் கிடைத்துள்ளது.
நஞ்சற்ற வேளாண்மை ஊடாக உற்பத்தி செய்யப்படும் நெல்லினையும் ஏனைய பயிர்வகை ஊடாக பெறப்படுகின்ற விளைச்சல்களும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் சிறைக் கைதிகளின் உணவுத் தேவைக்கும், ஏனைய சிறைச்சாலைகளின் உணவுத் தேவைக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
அறுவடை நிகழ்வில் பதில் பிரதான ஜெயிலர், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை காவலர்கள், ஊழியர்கள் மற்றும் புனர்வாழ்வு கைதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.