"அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் தேர்தல் தொடர்பில் நாடகம் நடிக்கின்றார்கள் என நாங்கள் நினைக்கின்றோம்."
இவ்வாறு, பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் நாடகம் நடிக்கின்றார்கள்
தொடர்ந்து அவர்,
ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது அரசியலமைப்பின் பிரகாரம் காலத்துக்கு காலம் நடைபெற வேண்டிய ஒரு முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது.
எதிர்வரும் 9ம் திகதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தலானது நடக்குமா நடக்காதா என நூலிலே ஊசல் ஆடிக் கொண்டிருக்கின்றது.
இந்த அரசு தங்களுடைய வங்குரோத்து அரசியலை தேர்தலில் காட்டாமல், சிறந்த முறையில் தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு அரசிற்கு இருக்கின்றது.
அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் நாடகம் நடிக்கின்றார்கள் என நாங்கள் நினைக்கின்றோம், ஏனெனில் இன்று இந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை பற்றி அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் செலவுகளுக்காக தேர்தல்கள் ஆணையகத்துக்கு 10 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் பொருளாதார சூழ்நிலையில் அந்த பணம் தேர்தல் ஆணையகத்திற்கு கிடைக்குமா கிடைக்காதா என்பது தேர்தல் ஆணையகத்திற்கும் அதன் தலைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையாளரும் ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் பற்றி அறிவிப்பு விடுகின்றார்.
தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலே அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை நடத்துவதற்கு ஆணையை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.
தற்போது இடம்பெறுகின்ற நிலையினை பார்க்கும் பொழுது தேர்தல் நடைபெறாது போல இருக்கின்றது, ஏனெனில் தபால் மூலமான வாக்கெடுப்பு காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியும் பணம் இல்லை என காரணம் கூறி நிறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறாமல் விட்டால் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் செலவழித்த அனைத்து பணங்களும் வீண் விரையம் ஆக்கப்படுகின்றது, அவர்கள் ஒவ்வொருவரும் செலவழித்த பணங்கள் இந்த நாட்டின் பணங்கள்.