இன்றைய தினம் சர்வதேச சுகாதார தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் வாய் பரிசோதனை முகாமும் இடம்பெற்றது.
‘புன்னகைப்பதற்காக உங்கள் வாய்ச்சுகாதாரத்தையும் பல்சுகாதாரத்தையும் எண்ணி நீங்கள் ஆடம்பரப்படுங்கள்’ என்ற தொனிப்பொருளில் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வாய்ச்சுகாதார தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பல் வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றிலிருந்து இரண்டு விழிப்புணர்வு பேரணியானது ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக வருகை தந்து மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டொக்டர் கே.சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பல்நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி பல் வைத்திய நிபுணர் டொக்டர் கே.முரளிதரன் உட்பட வைத்தியர்கள்,தாதியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் நடமாடும் பல்சிகிச்சை வாகனத்தில் அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் சாரதிகள்,முச்சக்கர வண்டி சாரதிகளின் வாய்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு சிறியளவிலான சிகிச்சைகள் வழங்கப்பட்ட அதேநேரம் மேலதிக சிகிக்சைகளுக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.