பெண்களுக்கான சுதந்திரத்தை கொடுத்து பெண்களின் வீரத்தை உலகிற்கு காட்டியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே என தமிழரசு கட்சியில் இளைஞர் அணி தலைவர் சேயோன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இறுதி யுத்த காலப்பகுதியில் வருகை தந்திருந்த போது பாரதி கண்ட புதுமைப் பெண்ணை நான் வன்னியில் கண்டேன் என தெரிவித்தார்.
அவ்வாறு புதுமை பெண்ணாக அலங்கரித்த அந்த ஈழ மகளாற்றின் தலைமை ஆண்களுக்கு நிகராக எதையும் சாதிக்க முடியும் என்று செய்தது, அதை வழி நடத்தி சென்றவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான்.
அவ்வாறு இருந்த மண்ணில் நாங்கள் தற்போது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம்.
ஒரு பெண் தன்னுடைய வறுமையான சூழலில் இருந்து கல்வியை கற்று சமூகத்திற்காக ஒரு பணியினை செய்வதற்காக தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற அமைப்பில் பணியாற்றி கொண்டு இருந்த அந்த பெண்ணை கடத்தி வெலிக்கந்தவில் வைத்து படுகொலை செய்தவர்கள் இப்பொழுது மட்டக்களப்பில் மகளிர் தினத்தை ஒரு கட்சி ரீதியாக கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற கேவலமான செய்தியை எம் கண் முன் பார்க்க முடிகிறது" என்றார்.