பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை - கல்வி அமைச்சு!பாடசாலைகளில் எதிர்வரும் காலங்களில் மாணவர்களை இடைநிலை வகுப்புக்களில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் கல்வி அமைச்சிற்கு வந்து தமது நேரத்தை வீண்டிக்காத வகையில் திட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக மாதிரி விண்ணப்பப்படிவமொன்று ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்த படிவங்களை பூர்த்தி செய்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இணைக்க விரும்பும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கான சுற்றறிக்கை
இதன்படி பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை முதலாம் ஆண்டிற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகளும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைத் தொடர்ந்து தரம் 6 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருவதால் சித்திரைப் புத்தாண்டிற்குப் பின்னர் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள பதிவு செய்யும் கடிதங்களை வெளியிடாது இருக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை