உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடமேனும் பிற்போடப்படும்?உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (03)வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முறையை மாற்றுவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் மோசமான முறையில் தலையீடு செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டியதில்லை என குறிப்பிட்ட அவர், தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், அதனால் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இதன் மூலம் ஏற்படப்போவதில்லை என தெளிவுப்படுத்தினார்.
புதியது பழையவை