புத்துயிர் பெற்றது மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம்!


மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இயங்கி வந்த சிங்கள மகா வித்தியாலயம் 33 ஆண்டுகளுக்கு பின் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் இன்று (27-04-2023)திறந்து வைக்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தில், சுமார் 2 ஆயிரத்து 700 மாணவர்களையும் 72 ஆசிரியர்களையும் கொண்டு முதலாம் தரம் முதல் உயர்தரம் வரையான வகுப்புக்கள் இடம்பெற்று வந்தன.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990ம் ஆண்டு காலப் பகுதியில், மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் மூடப்பட்ட நிலையில், பாடசாலை வளாகம் இராணுவத்
தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இன நல்லிணக்கத்தையும் அனைத்து மாவட்டங்களிலும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகள் ஆரம்பிக்கும் செயல்பாடுகளுக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட செயல் திட்டத்திற்கு அமைய
இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த சிங்கள மகா வித்தியாலயம் மீண்டும் மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டு, புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் அழைத்து வரப்பட்டு, தேசிய கொடி மாகாண கொடி மற்றும் பாடசாலைக் கொடி என்பன
ஏற்றப்பட்டு சமய வழிபாடுகளுடன் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.

புதிய மாணவர்களும் உத்தியோக பூர்வமாக அனுமதிக்கப்பட்டனர்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிங்களம் வித்தியாலய பாடசாலை ஆரம்ப நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத்,
கிழக்கு மாகாண அமைச்சர் செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்
மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை