காதலனுடன் இருந்த பெண்ணை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தேகம பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், கடந்த 6ஆம் திகதி தனது காதலனுடன் சமனலவௌ வாவியை பார்வையிட சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, வழிமறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரையும் அச்சுறுத்தியுள்ளார்.
பின்னர், அந்தப் பெண்ணை அருகில் உள்ள புதர் ஒன்றுக்குள் அழைத்துச் சென்று குறித்த அதிகாரி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், இனந்தெரியாத நபர் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் போல வேடமணிந்து சமனலவௌ வாவிக்கு அருகில் சுற்றித் திரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அதன்போது, அங்கு நிர்வாணமாக இருந்த இளம்பெண்ணையும், கைவிலங்கிடப்பட்டிருந்த அவரது காதலனையும் மீட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரையும் கைது செய்தனர்.
சந்தேகநபர் ஹம்பேகமுவ காவல் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான பெண்ணும், பாதிக்கப்பட்ட இளைஞனும் மருத்துவ பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.