மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 30ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வயிற்றில் கல்லுகள் உள்ளதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அறுவை சிகிச்சையின் பின் வைத்தியரின் அசம்பந்தபோக்கு காரணமாக உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு பாலமுனை பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க பாத்திமா மல்சா என்னும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக காத்தாங்குடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
சிறுமிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சனி கணேஷ் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கடந்த காலங்களில் ஏழை மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைபெறும் போது, வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்றுவரை தொடர்ச்சியாக இவ்வாறான அசம்பாவித நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உயிரை காப்பாற்றுவதற்காக வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உயிரை இழக்கும் ஒரு பரிதாபகரமான நிலையாகத் தான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை காணப்படுகின்றது எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.