நீங்காத நினைவில் சிவராம்!தராக்கி டி.சிவராம் கொல்லப்பட்டு 18 ஆண்டுகளாகின்றது. தலைநகர் கொழும்பில் பலரும் பார்த்திருக்கக் கடத்தப்பட்டு சிறி லங்கா நாடாளுமன்றத்துக்கு அருகிலே பிணமாக வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரது சடலம் - அவரின் விருப்பப்படியே - மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இலங்கையின் அனைத்துப் பாகங்களுக்கும் பயணம் செய்யும் ஒருவராக சிவராம் இருந்த போதிலும், அவரின் வாழ்விடமாக இருந்த கொழும்பு நகரிலேயே அவர் கொல்லப்பட்டார். அவரின் கொலை நடைபெற்ற பூகோளவியலே அவரின் கொலையில் யார் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்த்தப் போதுமானது.

கொலையை யார் புரிந்திருந்தாலும், உடலத்தை வீசுவதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் என்பது இலங்கை நீதி பரிபாலனத்த்தின் அவலத்தைச் சுட்டி நிற்கின்றது.

சிவராமின் கொலை தொடர்பாகப் பேசுவோரில் அநேகர் கொலையைப் புரிந்தவர்கள் யாராக இருக்கக்கூடும் என்பது தொடர்பில் மாறுபட்ட ஊகங்களைக்  கொண்டிருந்தாலும், எதனால் சிவராம் கொலையுண்டார் என்பதில் கருத்துபேதம் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.
 
சிவராம் பன்முகம் கொண்டவர். திரைப்படம் முதல் இலக்கியம் வரை உள்ளூர் அரசியல் முதல் பன்னாட்டு அரசியல் வரை பேசக் கூடிய, விவாதிக்கக் கூடிய அறிவுப் புலமையாளர். அவரது இறுதி நாட்களில் அவர் பேசியவை, எழுதியவை யாவையும் அவருக்கான எதிரிகளை அதிகரிக்கச் செய்திருந்தன என்பதைச் சாதாரண மனிதர்களும் உணர்ந்திருந்தனர். அதனால்தானோ என்னவோ சிவராமின் மரணம் மக்களிடம் அதிர்ச்சியை விடவும் கவலையையோ அதிகம் தோற்றுவித்திருந்தது.

சிவராமின் வாழ்க்கைக் காலம் குறுகியது. ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கைக் காலத்தில் அரைவாசிக் காலத்திலேயே அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டார். இன்று எம் மத்தியில் வாழும் மூத்த ஊடகவியலாளர்கள் பலரோடு ஒப்பிடுகையில் சிவராமின் ஊடகத்துறை அனுபவமும் குறுகிய காலமே.

1989இல் ஊடகத்துறையில் கால்பதித்த சிவராம் 2005இல் கொல்லப்பட்டுவிட்டார். ஊடகத்துறையைப் பொறுத்தவரை 16 வருட அனுபவம் என்பது சிலாகிக்கத்தக்கதே என்றாலும் குறுகிய காலத்தில் ஊடகத்துறையில் சிவராம் பதித்த தடம் நிராகரிக்கப்பட முடியாதது. இன்றுவரை அவருக்கு மாற்றாக, அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப எவரும் இல்லை என்பதே சிவராமின் சிறப்பை, தனித்துவத்தை விளக்கப் போதுமானது.

ஈழத் தமிழ் ஊடகத்துறையில் அதிகம் கொண்டாடப்பட்ட ஊடகராக சிவராம் விளங்குகிறார். அதைப் போன்று அதிக விமர்சனங்களைச் சந்தித்த ஊடகராகவும் அவரே உள்ளார். அநேக விமர்சனங்கள் அவரது ஊடகப்பணிக்கு அப்பாலான அவரது முன்னைய அரசியல் வாழ்க்கை மற்றும் பிந்திய அரசியல் சார்பு என்பவை தொடர்பாகவே அமைந்திருந்தன.

ஒரு சக ஊடகராக, சிவராமின் மாணவர்களுள் ஒருவராக என்னைப் போன்றவர்கள் இன்றும் சிவராமை நினைப்பதற்கும், அவரைக் கொண்டாடுவதற்கும் காரணம் அவர் எமக்கு ஊடகத்துறையில் காட்டிய முன்மாதிரியே.
 
எழுத்து ஒரு கலை. சிலருக்கு அது இயல்பிலேயே கைவரப் பெறுகின்றது. சிலர் பயிற்சி மூலம் அந்தக் கலையைக் கற்றுத் தம்மை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு சிறந்த ஆசான் கிடைத்துவிட்டால் எழுத்துக்கலையைக் கற்றுக் கொள்வது இலகுவாகி விடும். எம் போன்றோருக்கு சிவராம் என்றொரு ஆசான் கிட்டியபடியால்தான் நானும் ஒரு ஊடகன் என மார்தட்டிச் சொல்ல முடிகின்றது.

சிவராம் எந்தவொரு விடயத்தையும் நேரடியாகக் கற்றுத் தருவதில்லை. ஒரு விடயத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது, எவ்வாறு கற்றுக் கொள்வது என்பதற்கான வழியை அவர் கோடி காட்டுவார். அதனைப் புரிந்து கொண்டு சரியான தடத்தில் பயணம் செய்தவர்கள் அதிகம் கற்றுக் கொண்டனர். கற்றுக் கொடுப்பவனின் திறைமையும் கற்றுக் கொள்பவனின் சாதுரியமும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது சாதனை நிச்சயமாகி விடுகின்றது.

ஊடகத்துறையில் பணியாற்றுவோர் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவராக வியங்கியவர் சிவராம். தான் அவ்வாறு செயற்பட்டுக் கொண்டு தன்னைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். அத்தகைய சுயாதீன நிலையை அடைய யாருக்கு எத்தகைய உதவி, வழிகாட்டல் தேவையாக இருந்ததோ அதனை அவர் காலமறிந்து வழங்கினார். 

அதன் விளைவாக அதுவரை பெரிதும் அரசியல்வாதிகளையும், அரச அதிகாரிகளையும் அண்டி இருந்த ஊடகர்களில் பலரை சுயாதீன ஊடகர்களாக மாற்ற முடிந்தது. அவ்வாறு சுயாதீன ஊடகர்களாக மாறிய பலரால் தமது திறைமைகளை நிரூபிக்கவும் முடிந்தது.

ஊடகத் தளத்தில் மாத்திரமன்றி அரசியல் தளத்திலும் ஆளுமை செலுத்தியவர் சிவராம். 2001ஆம் ஆண்டில் தோற்றம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகர்த்தா அவரே. அந்த முயற்சியில் பல்வேறு தரப்புகளில் இருந்து பலரும் பங்குபற்றி இருந்தாலும், கருத்துருவாக இருந்த விடயத்துக்குச் செயல்வடிவம் தந்ததில் சிவராமின் பங்களிப்பு மிகமிக அதிகம். யாரை எவ்வாறு அணுகினால் விடயத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்கின்ற அனுபவ அறிவு அவரிடம் அதிகமாகவே இருந்தது. அதனால்தான் கூட்டமைப்பை ஒரு குறுகிய காலத்தில் உருவாக்கவும், அதனை ஒரு அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்கவும் முடிந்தது.

தற்கால உலகில் ஊடகர்களுக்கு எந்தவொரு நாட்டிலும் பாதுகாப்பு இல்லை. அரசாங்கத்தை விமர்சிக்கும், ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும், அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகப் பேசும், அரசாங்கங்களின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்தும் ஊடகர்கள் பழிவாங்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடரவே செய்கின்றன. சர்வாதிகார ஆட்சி, ஜனநாயக ஆட்சி என்ற பேதம் எதுவும் இல்லாமல் இந்த அவலம் நீடிக்கின்றது. மற்றவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் குரல்தரும் ஊடகர்கள் பாதிப்புக்கு ஆளானால் அவர்களுக்கே நீதி கிட்டுமா என்று தெரியாத நிச்சயமற்ற நிலையே உள்ளது.

இத்தகைய அவல நிலையில் இருந்து இலங்கையும் தப்பவில்லை. உள்நாட்டுப் போர் நடைபெற்ற ஒரு நாட்டில் ஊடகர்கள் கொல்லப்படுவது வழக்கமான விடயமாகக் கருதப்பட்டாலும், இலங்கையில் கொல்லப்பட்ட முதலாவது ஊடகர் போரோடு நேரடியாகத் தொடர்புபட்டிராத ஒருவராகவே இருந்தார். அவரில் தொடங்கி கொல்லப்பட்ட எந்தவொரு ஊடகரின் கொலையிலும் குற்றவாளி கண்டறியப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது இலங்கையைப் பொறுத்தவரை அதிசயமான செய்தி அல்ல. சிவராம் கொலையிலும் குற்றவாளி கண்டறியப்படுவார், தண்டிக்கப்படுவார் என்ற நம்பிக்கை தற்போது வரை எவருக்கும் இல்லை.
 
சிவராமோடு பழகியவர்களால், அவரோடு இணைந்து பயணித்தவர்களால் அவரை இலகுவில் மறந்துவிட முடியாது. அவரது பிரிவை விடவும் அவரது வெற்றிடத்தை நிரப்ப இன்றுவரை ஒருவர்கூட இல்லையே என்னும் எண்ணம்தான் அதிக துயர் தருவதாக உள்ளது.

சுவிசிலிருந்து - சண்.தவராசா
புதியது பழையவை