மறக்குமா மே18 - தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு நடத்திய இனவெறித் தாக்குதலின் இறுதிநாள்!



2009 மே 18 "தமிழர் தாயகம்" எனும் மூச்சுக் காற்று முற்றாய் முடங்கிப் போன நாள்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் நுழையும் போதெல்லாம் எமது உறவுகளின் கதறல்கள் இன்று வரை கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

14 ஆண்டுகள் கடந்தபோதும் எம் இனத்தின் வலிகள் துளி அளவும் குறையவில்லை.

தமிழினத்தின் மீது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய இனவெறித் தாக்குதலின் இறுதிநாள் அது.

எமது போராட்டங்கள்


பல போராட்டங்களை கடந்து விட்டோம், பல ஆட்சியாளர்களை பார்த்து விட்டோம், ஆனாலும் இன்னும் தீரவில்லை எமது இன்னல்கள்.
நாட்டிலும் போராடிப்பார்த்து விட்டோம், நாடு கடந்த, கடல் கடந்த தேசங்களிலும் போராடிப்பார்த்து விட்டோம்.

அன்று தமிழன் திட்டமிட்டு அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தாராளமாய் இருந்தும் சர்வதேசமும் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை.


தமிழினம் தமது தாயக மண்ணில் சுதந்திரமாய் வாழவே அன்று தொடங்கி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறது.


ஆனால் தமிழனை சொந்த மண்ணிலே அடிமைகளாய் வைத்திருக்கவே எத்தணிக்கிறது சிங்களப் பேரினவாதம்.

இலங்கையில் ஆட்சிகள் பல மாறினாலும் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அப்படியேதான் இருக்கிறது.

ஈழ தேசத்தில் எத்தனையோ ஆயிரம் உயிர்களை பலி எடுத்தும் பேரினவாதத்தின் வெறி இன்னும் அடங்கவில்லை.

அதற்காகவே எமது தாயகத்தில் நடக்கிறது நில அபகரிப்புக்களும், ஆக்கிரமிப்புக்களும்.

எமது நிலங்கள் பறிக்கப்பட்டு ஆங்காங்கே பெளத்த விகாரைகள் முளைக்கின்றன.


எம் வரலாற்றை சிதைத்து, இது சிங்கள, பௌத்த தேசம் எனக் காட்டுவதற்கு போராடுகிறது தென்னிலங்கை அரசு.

மே 18 இறுதி யுத்தத்தில் தமிழினத்தை வென்று விட்டதாய் சிங்கள அரசு மார்தட்டிக் கொண்டாலும், அன்று முற்றுப்பெற்றது ஆயுதப்போராட்டம் மட்டுமே, எங்களின் அகிம்சைப் போராட்டங்கள் இன்றுவரை தொடர்கிறது.

எமது தேசத்தில் சுதந்திரமாய் வாழவும், எம் இனத்தின் இருப்பையும், வரலாற்றுத் தொன்மையையும் பாதுகாக்க இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறோம்.

எமது தாயகத்தில் சுதந்திரமாய் வாழும்வரை தமிழினத்தின் போராட்டங்கள் முற்றுப்பெறப் போவதில்லை என்பதை சிறிலங்கா பேரினவாத அரசு எப்போது புரிந்து கொள்ளப்போகிறது.

எம் இனம் விடிவை நோக்கி நகர தென்னிலங்கை அரசியல் மட்டும் தடையல்ல, தமிழர்களாகிய நாமும் சில தவறுகளை செய்கிறோம்.

எமது இனம் இத்தனை இழப்புக்களை சந்தித்திருக்கிறது, ஆனாலும் இன்றைய தமிழ் சமுதாயம் அதை எல்லாம் மறந்து போகும் நிலமைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் / மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சுயநலவாதிகளாக, ஒற்றுமையற்றவர்களாக உருவாகிக்கொண்டிருக்கிறோம்.

இனத்தால் ஒன்றுபட்டு போராடி இறுதியில் முள்ளிவாய்க்காலில் நாதியற்றுக் கிடந்த தமிழினம் இன்று மதத்தை முன்னிறுத்தி போராடுகிறதோ என்ற ஐயம் உருவாகிறது.

மறுபுறம் தமிழ் அரசியல்வாதிகளும் தமது தமது அரசியல் சுயநலத்திற்காக பிளவுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது இலக்கு என்ன என்பது அவர்களுக்கே புரியாதபோது, சிங்களப் பேரினவாத அரசாங்கம் எப்படிப் புரிந்துகொள்ளும்.

இன்றைய இளையவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலர் இன்னும் உணர்வோடும், விடுதலைப் பற்றோடும் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பலர் திசைமாறிப் பயணிக்கும் அவலத்தை கண்முன்னே காண்கிறோம்.

போதைப் பாவனை, கலாசாரத்திற்கு புறம்பான விடயங்கள், உல்லாச வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் எனும் இலக்கு, அதைவிட தன்னம்பிக்கையற்ற மனநிலையோடு இலக்கின்றி வாழ்கிறார்கள்.

எமது வரலாற்று வலிகளை நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். எம் இனத்தின் வீழ்ச்சியை இந்த இளையவர்களே எழுச்சியாக்க வேண்டும், அதற்கான பணியை நாம் முன்னெடுக்க வேண்டும்.

எம் வரலாற்று தொன்மைகள், எம் வரலாறுகள் எம் இனத்தின் வலிமையை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அவற்றை எம் எதிர்கால சந்ததிக்கு கொண்டு சேர்ப்போம், நாம் வீழ்ந்த இனமல்ல என்பதை வலிகளோடு சேர்த்து வலிமையோடு கடத்துவோம்.

பல உயிர்களை இழந்து, யுத்த வடுக்களை சுமந்து, இன்றுவரை மீள முடியாத வலிகளுடன் இருக்கும் எம் உறவுகளும் தமது ஆதங்கங்கள் சிலவற்றை முன்வைக்கின்றனர்.

"முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, தமிழர் வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும், உணர்வுள்ள தமிழர் கூடும் இடங்களிலும், வீடுகள் ஒவ்வொன்றிலும் அனுஸ்டிக்கப்பட வேண்டும்.

மே 17 அன்று உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவரும் உணவை தவிர்ப்போம்.

மே 18 அன்று உணர்வுள்ள தமிழர் வீடுகள் ஒவ்வொன்றிலும் அறுசுவை உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அன்றைய தினம், மதியத்திற்குப் பிறகு ஒருவேளைக் கஞ்சியோடு அந்த நாளை நிறைவு செய்ய வேண்டும்.

அன்றையதினம் மாலை விளக்கேற்றி உணர்வோடு ஒன்றி நிற்க வேண்டும்.

சகல உணவகங்களிலும் உணர்வோடு ஒரு சாதாரண கஞ்சியை இலவசமாக வழங்கும் மனநிலை ஏற்பட வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏராளமான பாடங்களை எமக்கு அள்ளித் தந்துள்ளது.

இந்த உணர்வுபூர்வமான நிகழ்வு சாதி, சமய, மத, இன பேதங்களற்று அனுஸ்டிக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களும் பாற்சோறு காய்ச்சி கொண்டாடுவதை தவிர்த்து, இந்த துயர நிகழ்வில் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலை மற்றும் சிந்தனை ஏற்படும் விதத்தில் இந்த நிகழ்வு மாற்றப்பட வேண்டும்.

புத்தரின் போதனையில் மிக முக்கிய அத்தியாயமாக உள்ள "கர்மா" பற்றி ஒவ்வொரு பௌத்தர்களும் சிந்திக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் அரசியல்வாதிகளின் ஒன்று கூடலை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடும் எந்த ஒரு அரசியல்வாதியும், முள்ளிவாய்க்காலில் மக்களின் உணர்வுக்கு தலைமை தாங்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக மக்களுக்கு சத்தியம் செய்து தர வேண்டும்.

அப்பிடி இருப்பவர்கள் மட்டுமே அந்த புனித இடத்தில் தலைமை தாங்க பொருத்தமானவர்கள்."

இவை எல்லாம் நடக்குமாக இருந்தால், இறுதி யுத்தத்தில் தம் இன்னுயிரை இழந்த எங்கள் உறவுகளின் ஆத்மா ஓரளவேணும் நிம்மதி கொள்ளும்.

முள்ளிவாய்க்கால் எமக்கு கற்றுத் தந்த பாடங்கள் என்ன? நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன? அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.

இன மோதலுக்கும், சாதி, சமய வேறுபாட்டிற்கும், வர்க்க, பிரதேச வேறுபாட்டிற்கும் முடிவு கட்டுவோம்.

உணர்வுகளை அரசியலாக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.
புதியது பழையவை