மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்



இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார் என ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (03.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை புதிய அரசியலமைப்பு மூலம் காண இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மே தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.


சந்தர்ப்ப வாதம்
இனப்பிரச்சினைக்கான தீர்வை எதன் அடிப்படையில் பேசுவதாக ரணில் விக்ரமசிங்க வெளிப்படையாக இதுவரை பொது வெளியில் கூறவில்லை.

அத்துடன் நம்பிக்கை தரும் வகையில் அவரது ஏனைய நடவடிக்கைகள் அமையவில்லை. அத்துடன் ஜனாதிபதியின் உரைகள் பதவி ஏற்பில் இருந்து மாறி மாறி சந்தர்ப்ப வாதமாகவே அமைந்துள்ளது.


வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நடாத்திய சனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணையாக அறுதிப் பெரும்பான்மையான மக்கள் சமஷ்டித் தீர்வு வேண்டும் என்றே ஆதரவு கோரியுள்ளனர்.


இனப்பிரச்சினை
இதற்கு ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் மிகப் பெரும் ஆதாரம் அதன் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வான சமஷ்டி அடிப்படையில் பேச வருமாறு வெளிப்படையாக அரசாங்கம் அறிவித்தால் தமிழர் தரப்பு எப்போதும் தயாராகவுள்ளனர்.

இந்த நாட்டின் மீள முடியாத பின்னடைவுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு கொடுக்கப்படாமை என்ற உண்மையை உணர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்கள் கபடத்தனமாக மறைக்காது வெளிப்படையாக இன நல்லிணக்கத்துடன் மேசையில் உக்கார தயார் என்றால் அது தான் தீர்வுக்கான ஆரம்பம் எனத் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை