யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த பகுதியில் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்கள், குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியற் கட்சி பிரதிநிதிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிரப்பை வெளியிட்டிருந்தனர்.
யாழ். வலி வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணி, தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.