மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி பாலையடிவட்டை பிரதான வீதியில் நேற்று (14-05-2023) மாலை ஆல மரம் முறிந்துவீழ்ந்ததில் அப் பகுதிக்கான போக்குவரத்தும், மின் விநியோகமும் தடைப்பட்டது.
வெல்லாவெளி பால் குளிரூட்டும் நிலையத்துக்கு முன்பாக இருந்த மிகப் பழமையான ஆலமரமே முறிந்து வீழ்ந்துள்ளது. வெல்லாவெளி பிரதான வீதியூடான பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி மின்சார சபையினர் மின் விநியோகத்தினை வேறு நிலைகள் மூலம் வழங்கி மின் இணைப்பினை திருத்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் முறிந்து வீழ்ந்த ஆலமரத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கையினை பிரதேசசபையோ, வீதி அபிவிருத்தி திணைக்களமோ முன்னெடுக்கவில்லையென
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆலமரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக கனரக வாகனங்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.