திருகோணமலை பொது வைத்தியசாலையை நெருங்கும் ஆபத்து



திருகோணமலை பொது வைத்தியசாலை தற்போது இருக்கின்ற இடத்தில் இருந்து 6ம் கட்டை பகுதியை நோக்கி முழுமையாக இடமாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் குறித்த கட்டடம் சீன சுற்றுலா விடுதி ஒன்றுக்காக வழங்கப்படவிருப்பதாகவும் அறிய முடிகிறது. 

இது தொடர்பான கலந்துரையாடல் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்களுடன் 15.02.2023 அன்று காலை 11.00 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 

அன்றையதினம் வைத்தியசாலைக்கான புதிய இடமும் பார்வையிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 50 ஏக்கர் காணியில் புதிதாக வைத்தியசாலை அமைக்கப்பட்டு 5 வைத்திய நிபுனர்கள், 35 தாதிகளுடன்  மாவட்ட வைத்தியசாலையாக இயங்கவிருப்பதாகவும் ஏனைய பிரிவுகளும், ஊழியர்களும் கந்தளாய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு விசேட பிரிவுகளும் உருவாக்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலை தரமுயர்த்தப்படவுள்ளது.

இடப்பற்றாக்குறை, கழிவு முகாமைத்துவம், கடல் அனர்த்தம், பாதுகாப்பு உட்பட பல காரணங்களுக்காக திருகோணமலை வைத்தியசாலையை இடமாற்றுவதற்கான முயற்சிகள் சில வருட காலமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அண்மையில் ஜப்பான் நாட்டின் நன்கொடையில் உருவாக்க முயற்சிக்கப்பட்ட இதய சிகிச்சைப் பிரிவிற்காக தனியான பிரிவினை உருவாக்கும் செயற்திட்டத்தின்போது வைத்தியசாலையின் இடமாற்றம் தொடர்பாக பேசப்பட்டது. 

பின்னர் வைத்தியசாலையின் முன்பகுதியில் அமைக்கப்படுவதற்கான முயற்சி நடைபெறுவதாக கூறப்பட்டபோதும் வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பின்மையின் காரணமாக அந்த வாய்ப்பும் கைநழுவிப்போனது.

அத்துடன் தனியான புற்றுநோய் பிரிவுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன அதற்கு அப்பகுதிக்கு பொறுப்பாக இருந்த விசேட வைத்திய நிபுனர் (Oncologist) திருமதி.சசிகலா பரமகுலசிங்கம் அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார்.

ஏனோ அதுவும் நடைபெறவில்லை. இதுபோன்ற பல வாய்ப்புகளை எமது திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் தவறவிட்டுள்ளன. இதற்கான காரணம்தான் என்ன? திருகோணமலை மாவட்டத்தில் அக்கறை இல்லாதவர்கள் தலைமைத்துவத்தில் இருப்பதா?

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையாக இருந்து பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பது சிகிச்சை பெற்ற பலருடைய கருத்து.

வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என்றவிதமாக பல வைத்தியர்களுடைய சேவை அமைந்திருப்பதாகவும், வைத்தியசாலையை மூடும் விதமாக திட்டமிட்டு சில விடயங்கள் செயற்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. 

பல பௌதீகவள பற்றாக்குறைகுறைகளுடன் சிறந்த வைத்திய சேவையை வழங்க முடியாத எமது வைத்தியசாலை தொடர்பில் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புதியது பழையவை