முகநூல் பயனாளர்களுக்கு வெளியான எச்சரிக்கை!நுவரெலியா, கண்டி, கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளில் சட்ட விரோத பிரமிட் முறையிலான நிதி வர்த்தகங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி குறிப்பாக, அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களால் மிகவும் சூட்சுமமாக முகநூல் வழியாக இந்த மோசடி வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்டோர் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை பணத்தை பெறும் குறித்த ஒரு வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆரம்பத்தில், பயனாளர்களுக்கு பணத்துக்குப் பதிலாக சுமார் ஐயாயிரம் பெறுமதியான தேநீர் கோப்பை தொகுதிகள் அல்லது உணவுத் தட்டுகளை வழங்குவதாகவும், பின்னர் 20 பேரை இணைத்துக்கொண்டு அதன் மூலம் பணத்தைப் பெற்றுக்கொடுத்தால் மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாய் வங்கிக்கு வைப்பீடு செய்யப்படும் என்றும் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த வலையமைப்பினரோடு இணைந்துகொள்பவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது, கவர்ச்சியான ஆடம்பரமான ஆண்/பெண்களை வரவழைத்து பணம் சம்பாதிக்கும் வழிவகைகளை கூறுவது என பலவாறு வலையமைப்பினர் செயற்படுவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

மேலும், இந்த வலையமைப்போடு தொடர்புகொள்பவர்கள், தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை இதில் இணைத்துக்கொள்வதற்காக அவர்களது வீடுகளுக்கும் சென்று வலையமைப்பினர் தொல்லை கொடுப்பதாகவும், அவர்கள் பல வாகனங்களின் முன்பாக நின்று எடுக்கப்பட்ட படங்களை தமது முகநூல் பக்கத்தில் காட்டி பலரை மூளைச்சலவை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் பிராந்திய கல்வி மற்றும் சுகாதார திணைக்களங்கள், பிரபல கல்லூரிகள், உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு பிரதானமாக செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதால் பலரும் நம்பி பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக பலர் மீது பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை