கடந்த மாத மின்சார கட்டண நிலுவையினை செலுத்துவதற்காக (04-08-2023) திகதி மட்டக்களப்பு தபால் நிலையத்துக்கு சென்றிருந்த சமூகச் செயற்பாட்டாளர் ஜனார்த்தனன் தன்னுடன் 5 பேர் கொண்ட அந்த சிறிய வரிசையில் எனக்கு முன்னால் ஏற்கனவே அறிமுகமான அரசடி auto stand இல் நிற்கும் அந்த அண்ணா நின்று கொண்டிருந்தார் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில் அவர் குறிப்பிடுகையில்.....
சிறு புன்னகையுடன், "நீங்களும் கரண்ட் பில் கட்டத்தானா தம்பி.." என்றார் .
"ஓம் அண்ணா" என்றேன்.
இன்டைக்கு காலைலயே வீட்ட வந்து கரண்ட் கட் பண்ணிட்டானுகள் தம்பி என்றார்.
"எவ்வளவு அண்ணன் கட்டனும்" என்றேன்
"..6300 ரூபாய் தம்பி, இன்டைக்கு வெள்ளிக்கிழமை வேற, விட்டா இனி திங்கள் தான், மூத்த மகன் இந்த முறை O/L எழுத போறான், இப்ப கட்டினால் உடனே கணேக்ஸன் தருவம் எண்டாங்க அதான் இன்னொரு ஆட்டோ பொடியண்ட கடன் வாங்கிட்டு வந்தன்..." என அவர் தொடர்ந்து கொண்டிருக்க..
எமக்கு முன்னாள் நின்றுகொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க அம்மா 5000 ரூபாவினை கொடுத்து தனது நிலுவையை செலுத்திக் கொண்டிருக்க அவரை சுட்டிக் காட்டி, "பாவம் இந்த அம்மா, வெட்டவேண்டாம் திங்கள் கிழமை கட்டுறன் என்டு கெஞ்சியும், வெட்டி போட்டு போயிருக்கானுகள் பாருங்களன்" என கூறினார்.
அடுத்து அவரது முறை வந்ததால், கட்டணத்தை செலுத்தி விட்டு, ஒரு புன்னகையுடன் என்னிடமிருந்து விடைபெற்று சென்றார் அந்த அண்ணன்.
உண்மையில், இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களும், தண்டனைகளும் இனங்களுக்கும், பிரதேசங்களுக்கும் வேறுபடுவது போல் செல்வாக்கு உள்ளவர்கள் - செல்வாக்கு இல்லாதவர்கள் எனவும் வேறுபட்டு கொண்டேதான் இருக்கிறது.
ஏனெனில் 5ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய்களுக்கு 3, 4 மாத நிலைவை உள்ளது என ஓர் ஏழை பயன்படுத்தும் மின்சாரத்தினை ஓடி வந்து துண்டித்து விட்டு செல்லும் அதே மின்சார சபைதான் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 – 15 ஆம் திகதி வரை நடைபெற்ற நாமல் ராஜபக்ஸவின் நிகழ்வொன்றுக்காக பதிவாகிய மொத்தம் 26,82,246.57 ரூபா மின்கட்டணத்திற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கான மின்சார கட்டண நிலவை 12,056,803.38 ரூபா இன்னும் செலுத்தப்படவில்லை என சபை சுட்டிக்காட்டுகிறது. இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மிஹிந்தலை விகாரையின் நிர்வாகம் 41 இலட்சம் மின்கட்டணத்தை பலமாதங்களாக செலுத்தாமல் இருந்துள்ளது. கடந்த வாரம் வரை இலங்கை மின்சார சபை நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாது இருந்துள்ளது.
இவ்வாறு செல்வாக்குள்ள பல நபர்கள், நிறுவனங்கள் என பட்டியல் நீண்டு கொண்டிருந்தும் அவற்றை கண்டு கொள்ளாது, செல்வாக்கிழந்தவர்கள் மீது தன் கைவரிசையை காட்டிக் கொண்டிருக்கின்றன. இலங்கை மின்சார சபை போன்ற சில நிறுவனங்கள்.