ஊடக அடையாள அட்டையும் - மட்டக்களப்பில் அரசியல் அடிவருடிகளின் பழிவாங்கல்களும்!கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடைபெற்றுவருகின்ற சம்பவங்கள் தொடர்பாக, கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் போன்ற அமைப்புக்களின் முன்நாள் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரத்தினம் அவர்கள் ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தார்.

'மட்டக்களப்பில் சுதந்திரமான ஊடக செயற்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடும் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பில் அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் மேற்கொண்டுவருகின்ற அடாவடித்தனங்களை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்ற அவரது அறிக்கை இது:

மட்டக்களப்பில் மீண்டும் துணிச்சலும் செயல்திறனும் கொண்ட சில ஊடகவியலாளர்களின் கரங்களை கட்டிப்போடும் செயல்பாடே ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாமையாகும்.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு அனுமதி மறுக்கப்பட்டமை சுதந்திரமான ஊடக செயற்பாட்டை தடுக்கும் மனித உரிமை மீறலாகும்.

இத்தகைய செயற்பாட்டை அனுமதிக்க முடியாது.

ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு முட்டுக்கட்டை போட்டு ஜனநாயக விரோத செயல்களின் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு அழைப்பை அனுப்பும் பொறுப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சார்ந்ததாகும்.

அரசாங்க அதிபர் அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக செயற்பட்டால் இது போன்ற தவறுகள் அடாவடித்தனங்கள், அராஜகங்கள் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும்.


டிக்சன் நிலவீர, அந்தோனிமுத்து, யோகநாதன், ஏ.கே. பத்மநாதன், சண்முகம் என நேர்மையானவர்கள் அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக செயற்படாதவர்கள் அரசாங்க அதிபர்களாக கடமையாற்றிய காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்கிறேன்.

இவர்கள் அரசியல்வாதிகளின் காலைப்பிடித்து அவர்களின் சிபார்சில் அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அல்ல.

திறமையின் அடிப்படையில் அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

எந்த ஒரு அரசியல்வாதிக்கும் பயப்படாமல் நிர்வாகத்தை திறம்பட செய்தார்கள்.

அந்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு உரிய கௌரவத்தையும் அவர்களுக்கான வசதிகளையும் செய்து தந்தார்கள்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதியாக அரசாங்க அதிபராக பதவி வகித்த சிங்களவர் டிக்சன் நிலவீர மிக நேர்மையானவர். இனப்பாகுபாடு அற்ற மிக நேர்மையான அன்பாக பழக கூடிய ஒருவர்.


நீதி அமைச்சராகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் கே.டபிள்யு. தேவநாயகம் பதவி வகித்த போதிலும் அவரின் கைப்பொம்மையாக டிக்சன் நிலவீரவோ அல்லது அந்தோனிமுத்துவோ செயற்படவில்லை.

அரசாங்க அதிபர் டிக்சன் நிலவீர இடமாற்றம் பெற்று சென்ற வேளையில் அவருக்கு மாவட்ட செயலகத்தில் நடந்த பிரியாவிடையில் குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகத்தை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்பார்கள் என சொன்னார். அக்கூட்டத்தில் நான் உட்பட பி. ஜோசப் ( பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ) வீ. சு. கதிர்காமத்தம்பி, ஆர். நித்தியானந்தன், ஊடகவியலாளர்களாக கலந்து கொண்டோம்.

சூறாவளியை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நிவாரணத்தில் அதிகாரிகள் சிலர் அரசியல்வாதிகளின் பக்க பலத்துடன் மோசடியில் ஈடுபட்ட சம்பவங்களை ஆதாரங்களுடன் சூறாவளி பூராயம் என்ற தலைப்பில் ஜோசப் அண்ணன் சிந்தாமணியில் தொடர்கட்டுரையை எழுதினார்.


அந்த நேரத்தில் அரசாங்க அதிபர் டிக்சன் நிலவீர ஜோசப் அண்ணனை நேரடியாக அழைத்து பாராட்டினார்.

அவர்தான் நேர்மையான அரச அதிகாரி.

ஆனால் இன்றுள்ள அரசாங்க அதிபர் ??????????

அன்றிருந்த நேர்மையான அரசாங்க அதிபர்களையும் இன்று அரசியல்வாதிகளின் காலைப்பிடித்து அவர்களின் கைப்பொம்மையாக செயற்படும் அரசாங்க அதிகாரிகளையும் எண்ணிப்பார்க்கிறேன்.

தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் ஊடகவியலாளர்கள் என கணிபபிடுவது மடைத்தனமான செயற்பாடாகும்.

இலங்கையில் பிரபல்யமான ஊடகவியலாளர்கள் பலர் தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டையை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

பிரபல்யமான ஊடகவியலாளர்களிடம் தகவல் திணைக்கள அடையாள அட்டை கிடையாது.

அதற்காக அவர்களை ஊடகவியலாளர் இல்லை என கூறுவதைப்போல ஒரு முட்டாள்தனம் வேறு கிடையாது.

இந்த தார்ப்பரியங்களை விளங்கி கொள்ள முடியாத படிப்பறிவில்லாத அரசியல்வாதிகளும் அவர்களின் காலைப்பிடித்து வாழும் அதிகாரிகளும் இருக்கும் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த அவல நிலை தொடரத்தான் போகிறது.

இலங்கையில் பிரபல்யமான ஊடகவியலாளர்களிடம் தகவல் திணைக்கள அடையாள அட்டை இல்லா விட்டாலும் International Federation of Journalists அமைப்பால் வழங்கப்படும் International Press Card இருக்கும்.


அதுவே சர்வதேச ரீதியான அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையாகும்.


International Press Card வைத்திருக்கும் ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை அவர் ஊடகவியலாளர் இல்லை என கூறும் படிபறிவற்ற ஊடகநெறி முறை பற்றி அறியாத அரசியல்வாதியின் செயற்பாட்டிற்கு மட்டக்களப்பு மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை படுகொலை செய்து ஊடகவியலாளர்களின் குரல்வளைகளை நசுக்கிய கொலையாளிகள் இன்று அதிகார கதிரையில் அமர்ந்து கொண்டு, துணிச்சலுடன் மக்களின் குரலாக செயற்படும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அவர்களின் குரல்வளைகளை நசுக்க முற்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு முடிவு கட்டும் பொறுப்பு மட்டக்களப்பு மக்களின் கைகளில் தான் உண்டு.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து மக்களும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு நடந்த அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

இந்த ஒற்றுமை நிலைக்க வேண்டும்.

இரா.துரைரத்தினம். ஊடகவியலாளர்.

முன்னாள் தலைவர்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
புதியது பழையவை