மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களை அடக்குவது ஜனநாயக விரோத செயற்பாடு - இரா.சாணக்கியன் சீற்றம்



மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் வாதிகளின் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் ஊடவியலாளர்கள் அடங்குமுறைக்கு உட்படுத்தப்படுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தமது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தி தகுதியானவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை அடக்கும் செயற்பாடு தொடர்பில் நேற்று (01-09-2023) கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தளவில், ஊடகவியலாளர்களை மாவட்ட செயலகத்திற்குள்ளே அரசாங்க அதிபர் அனுமதிப்பதில்லை என்பதை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்த ஊடகவியலாளரை ஊடகவியலாளர் இல்லை என்று சொல்வதும் அதேபோன்றுதான் அந்த ஊடகவியலாளரை மிக மோசமான வகையிலே கூட்டங்கள் நடக்கும் பொழுது பேசுவதும் அராஜகமான நடவடிக்கை.

அரசுக்கு தேவையான விடயங்களை நடைமுறைப்படுத்தும் போது தமிழ் மக்களை காப்பாற்ற போகின்றோம், தமிழ் மக்களை மீட்க போகின்றோம், கிழக்கு மாகாணத்தை மீட்க போகின்றோம் என்று சொல்லி வந்தவர்கள் தாங்கள் செய்யும் பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகவியலாளர்களை அடக்குவது உண்மையிலே ஜனநாயக விரோதமான செயற்பாடு.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வாரம் ஊடக அமைச்சருடைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசுவதற்கு இருக்கின்றேன்” என்றார்
புதியது பழையவை