கொழும்பில் உள்ள அரச பேருந்து ஆசனப் பதிவு செய்யும் இடத்தில் மேலதிக பணம் அறவிடும் காரணத்தினால் நேரடியாக பேருந்தில் வந்து நடத்துனரிடம் பேசி ஆசனங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் பேருந்து நடத்துனர்களும் பயணச்சிட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரச பேருந்துகளில் பயணம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமை காரணமாக தென் இலங்கைக்குச் சென்று தொழில் புரிந்து தங்களது குடும்பங்களை பார்ப்பதற்காக இலங்கை தனியார் பேருந்துகளில் செல்லாமல் அரச பேருந்துகளில் பலர் பயணம் செய்கின்றனர்.
எனினும் அரச பேருந்துகளின் நடத்துனர்கள் சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்குடனே செயல்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் உள்ள அரச பேருந்து ஆசன பதிவு செய்யும் இடத்தில் சென்று ஆசனம் பதிவு செய்தால் அதற்கும் மேலதிக பணம் அறவிடுகின்றார்கள் என்ற காரணத்தினால் நேரடியாக பேருந்தில் நடத்துனரிடம் பேசி ஆசனத்தை பெறுகின்றனர்.
உண்மையிலேயே நாட்டின் நிலைமையை பொருத்தவரையில் தங்களது குடும்பத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்ற வேளையில் இவ்வாறான ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடானது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த விடயம் தொடர்பாக கல்முனை அரச பேருந்து உயர் அதிகாரியிடம் வினாவியே போது இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பேருந்தின் இலக்கம் எந்த நேரம் , சாரதி, நடத்துனர் என்ற தகவலை வழங்கி வைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயமானது தொடர்ச்சியாக இடம்பெரும் செயற்பாடாக காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால் பேருந்தில் உங்களுடைய உரிமை சார்ந்த விடயங்களை நடத்துனரிடம் கேட்டு பெற்றுக் கொள்வது சிறந்த விடயமாகும்.