கடந்த சில வாரங்களாக திருக்கோணமலையில் பிக்குகளின் அராஜகம் அதிகரித்துள்ள நிலையில், திருக்கோணமலை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது TID விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அச்சுறுத்தபட்டு வருகின்றனர்.
பெரியகுளத்தில் சட்ட விரோத விகாரை அமைப்பதற்கு எதிராக போராடிய ராஜு எனும் சமூக செயற்பாட்டாளரை TID பிரிவினர்,(19.09.2023) ஆம் திகதி அவரது வீடு மற்றும் வேலை தளங்களுக்கு தேடிச்சென்று விசாரணை செய்ததுடன், தங்களுடைய அலுவலகத்துக்கு வருமாறும் அழைப்பானை விடுத்துள்ளனர்.
அவரை மிரட்டும் வகையிலும் நடந்து கொண்டுள்ளனர். இது செயற்பாட்டாளர்கள் மீது அச்சுறுத்தலை விடுக்கும் செயற்பாடாக உள்ளது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்கள் திருக்கோணமலையில் தாக்கப்பட்டதை தொடர்ந்து, திருக்கோணமலை முன்னணி செயற்பாட்டாளர்களையும் TID தேடி வருகின்றனர்.
இவ்வாறான தொடர் செயற்பாடுகளால், திருக்கோணமலை செயற்பாட்டாளர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரிடம் வினாவிய போது, பிக்குகள் மாவட்டத்தின் முக்கிய கூட்டமாகிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவமானப்படுத்திய போதும் பிக்குக்களை இதுவரை கைது செய்யாத காவல்துறை, சமூக செயற்பாட்டாளர்கள் மீதும் மட்டும் இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது இலங்கையின் சட்ட ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது என்ற கருத்தை தெரிவித்தார்.