மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்காக போராட்டம் நடாத்திய பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்



மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைக்காக, கால்நடைப் பண்ணையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய
பல்கலைக்கழக மாணவர்கள் அறுவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை, பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

மேய்ச்சல் தரைக்காகப் பயன்படுத்தப்பட்ட
நிலங்களும் உழவு இயந்திரங்கள் மூலம் பண்படுத்தப்பட்டுள்ளன.
பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வயல் நிலங்களில் இருந்து கால்நடைகளை அகற்ற வேண்டிய தேவை அவசியமாகியுள்ளது.

இதனால் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் கால்நடைப் பண்ணையாளர்கள் செய்வதறியாது நிர்கதியாகியுள்ளனர்.

தமது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், மேய்ச்சல் தரைப் பகுதியை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றுமாறும் அவர்கள் 52வது நாளாக இன்றும்(05-11-2023)
போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவை வழங்கும் வகையிலும், நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்
இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டம் நிறைவடைந்த பின்னர் பேருந்தில் பயணித்தபோது, சந்திவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
பிரதான வீதியில், பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்தமைக்கான காரணம், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் தொடர்பில், மாணவர்களிடம் பொலிஸார் வினவினர்.

ஆள் அடையாளத்தை மாணவர்கள் உறுதிப்படுத்திய நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக
கலைப்பீட மாணவர் ஒன்றிய பிரதிநிதி உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்து, தமது வாகனத்தில், சந்திவெளிப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்
சென்றதோடு, ஏனைய மாணவர்களையும், அவர்கள் பயணித்த பேருந்துடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீண்ட நேரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 6 மாணவர்களும், மருத்துவப் பரிசோதனையின் பின்னர், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்
முற்படுத்தப்பட்டனர்.

மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட வேளை அப்பகுதியில் ஒன்றுகூடிய அரசியல் பிரதிநிதிகளும் மக்களும், மாணவர்களின் கைதுக்கு கடும் ஆட்சேபம்
வெளியிட்டனர்.

சந்திவெளிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட அரசியல் பிரதிநிதிகள்
பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டனர்.

வந்தாறுமூலை,களுவன்கேணி சந்திவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக ஆறு மாணவர்களும், இன்று மாலை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி
அன்வர் சதாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சட்ட விரோதமாக ஒன்றுகூடியமை,பெருந்தெருக்கள் சட்டத்தின் கீழ் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் மீது வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

மாணவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான ஜெகன்,கமலதாஸ்,ரமனா,சதுர்திகா ஆகியோர் முன்னிலையாகினர்.

வழக்கை ஆராய்ந்த நீதிபதி மாணவர்களை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்தார். 

குறித்த வழக்கானது எதிர்வரும் 17ஆம் திகதி வரையில்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிணையெடுப்பவர்கள் தமது இருப்பிடத்தினை கிராம சேவையாளர் உறுதிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த உறுதிப்படுத்தலை பெறுவதற்கான
நேரம் நீடித்த காரணத்தினால் குறித்த ஆறு மாணவர்களும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
புதியது பழையவை