மட்டக்களப்பில் திருமணமான புது மாப்பிள்ளை உயிரிழப்பு - சோகத்தில் குடும்பம்மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் பாம்பு தீண்டி அண்மையில் திருமணமான புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் நேற்று (05-11-2023) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சம்பவத்தில் அண்மையில் திருமணமான (24) வயதுடைய பாரதிபுரம் ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மார்ட்டின் சில்வா காசுதன் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பண்ணை உரிமையாளர் ஒருவரின் மாடுகளை பராமரித்து கொண்டிருந்த போது வாந்தி மற்றும் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பாவையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை