அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது பொதுமக்களுக்கு விசேட அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், அனைத்து மக்களும்இன்று(26-12-2023) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழி பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இவ்வாறு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்றுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
19வருட நிறைவு
இந்தோனேஷியாவின் சுமத்ராதீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழிப் பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் பாதிக்கச் செய்த நிகழ்வு ஏற்பட்டு 19வருட நிறைவு இன்றாகும்.
ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று இலட்சம் வரையான மக்கள் பலியாகினர். உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிட இயலாதவை.
சுனாமி ஏற்பட்டு 19 வருடங்கள் கடந்த போதிலும் அதன் வடுக்களிலிருந்து இன்னும் இலங்கையின் சில பகுதிகள் மீளாத நிலையில் உள்ளன.
உறவினர் மற்றும் நெருக்கமானவர்களை இழந்த துயரங்கள் ஒருபுறமிருக்க மக்களில் பலர் இழப்புகளில் இருந்து இன்னும் மீளவில்லை.
இவ்வாறான ஒரு இயற்கையின் சீற்றம் ஏற்படும்போது மக்கள் விழிப்பாக தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கடந்த சுனாமி பேரழிவு எமக்கு உணர்த்தியுள்ளது.