அம்பாறையில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை
அம்பாறை மாவட்டம் இறக்காமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இனம் தெரியாத நபர் ஒருவர் நேற்று (23-12-2023) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து மேலதிக விசாரணைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது சித்தீக் ஹாஜியார் என்பவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


கொலைக்கான காரணம்
இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை இறக்காமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


வேலை ஒன்றினை முடித்த பின்னர் அதற்கான கூலி கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்பதுடன் இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற பின்னர் அருகில் இருந்த வீடு ஒன்றில் மறைக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலை வேளையில் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதியது பழையவை