பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது- கோ.கருணாகரம்(ஜனா)எம்பி



எங்கள் மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கடும் தொணியில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேற்றைய தினம் (18-12-2023) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட எங்களது உணர்வாளர்களை பார்ப்பதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று இருந்தேன்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் நகுலேஷன் மற்றும் முனைக்காட்டை சேர்ந்த பேக்கரியில் கேக் விற்பனை செய்தவர் இவ்வாறாக11 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கின்றார்கள்.




உண்மையில் நகுலேஷ் இறந்த மாவீரர்களது குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை கொடுத்து அவர்களை கௌரவிப்பதற்காக அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

அதே போன்று மோசேஸ் என்கின்ற பையன் பேக்கரியில் ஒரு கேக் விற்பனை செய்வதற்காக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

அதுபோல வாடகைக்கு வண்டி செலுத்துபவர் தரவை மாவீரர் உயிலும் இல்லத்திற்கு ஒலிபெருக்கி போன்ற பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் அதைவிட இன்னும் ஒரு மோசமான நிகழ்வு கறுவாக்கேனியிலே இடம்பெற்றிருக்கின்றது.


இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் பொலிஸ் நிலையம் சென்று மாவீரர் துயிலும் இல்ல நிகழ்வுக்காக பணம் கேட்டதாக முறைப்பாடு ஒன்றை வேண்டுமென்று செய்திருக்கின்றார்.

அவருக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டம் பாய்ந்து இருக்கின்றது.

அந்த வகையில் இந்த முறை பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு உள்ளே கைது செய்தது ஒரு திட்டமிட்ட செயலாகத்தான் நான் பார்க்கின்றேன்.

ஏனென்றால் இந்த முறை 12 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவராத முறையில் கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்தடுத்து வரும் தினங்களில் இந்த மாவீரர் நினைவு நாட்களை செய்வதற்கு மக்களை பயம்முறுத்தும் ஒரு செயலாக பொலிஸார் இந்த வேலைகளை செய்து இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.


ஏனென்றால் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரது படத்தையோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமான பதாகைகள் எதையுமே வைத்திருக்காமல் அவர்கள் தங்களுடைய உறவுகளை நினைவு கூர்வதற்காக சென்ற வேளையிலே அல்லது பங்கு பற்றிய வேளையிலே அவர்களை கைது செய்திருப்பது என்பது உண்மையிலேயே ஏற்க முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது.

இந்த நாட்டில் வடகிழக்கில் மாத்திரமல்ல முழு நாட்டிலுமே பிரச்சினைகள் உருவாகி இருக்கின்றது. தெற்கில் இரண்டு தடவை கிளர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது.


அதேபோன்று வடகிழக்கில் தங்களது உரிமைகளை பெறுவதற்காக மக்கள் போராடியிருக்கின்றார்கள் மரணித்திருக்கின்றார்கள்.


அந்த வகையில் எங்களது மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ அல்லது பாதுகாப்புப் படையோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம்.

இந்த வருடம் 10 பேரை கைது செய்திருக்கின்றீர்கள் அடுத்த வருடம் நீங்கள் விருப்பமென்றால் இதைவிட அதிகளவான கைதுகளை செய்யலாம்.


ஆனால் ஒன்று கைது செய்வதை மிகவும் அநியாயமான கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். எந்த வித வாழ்வாதாரமும் அற்ற வகையிலே அவர்களது குடும்பம் நிற்கதியாகியுள்ளது.


அவர்களது உறவினர்கள் மரணித்திருக்கின்றார்கள் அவர்களை நினைவு கூர்ந்ததற்காக அவர்களை நிர்கதியாக்கி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை அடைத்து வைத்திருப்பது என்பது ஏற்க முடியாத விடயம்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி வடகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிற்பகல் 3 மணிக்கு சந்திக்க இருப்பதாக நேற்று(18-12-2023) மதியம் செய்தி அனுப்பியிருக்கின்றார்.

நிச்சயமாக 21ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஜனாதிபதியை சந்திப்போம். அவரிடம் நாங்கள் இந்த பிரச்சினையை மிகவும் ஆணித்தரமாக கூறுவோம்.


அவரது கூற்று மற்றும் உத்தரவுகள் பாதுகாப்பு படையினாலும் மற்றும் அரசு அதிகாரிகளினாலும் நிறைவேற்றப்படுவதாக கடந்த காலங்களிலே எமக்கு தெரியவில்லை.

இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் இந்த உறவுகள் சம்பந்தமாக 21ஆம் திகதி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவோம் என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை