மாவீரர் நினைவேந்தல் - தமிழ் ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த சி.ஐ.டி!மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை அறிக்கையிடச் சென்ற மட்டகளப்பு ஊடகவியலாளர் தேவப் பிரதீபன், இன்று (08-12-2023)வாழைச் சேனை குற்றப்புலனாய்வு பிரிவினரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வாகனப் பதிவு தொடர்பான விசாரணைகளுக்கென அழைக்கப்பட்ட போதிலும் தரவை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் தாம் கலந்துகொண்டமை தொடர்பாகவே விசாரணை செய்யப்பட்டதாகவும் தேவப் பிரதீபன் கூறியுள்ளார்.

தரவை மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தலில் பங்குபற்றியவர்களின் வாகன பதிவிலக்கங்களின் அடிப்படையில் தம்மை போன்று பலரும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தரவை மாவீரர் நினைவேந்தல்
மோட்டார் வாகன ஆவணங்களை ஆரம்பத்தில் பரிசோதித்த வாழைச்சேனை குற்றப்புலனாய்வு பிரிவினர், கடந்த 27 ஆம் திகதி எங்கே சென்றீர்கள் என ஊடகவியலாளரிடம் வினவியுள்ளனர்.

செய்தி சேகரிப்பு நடவடிக்கைகளிலேயே அன்றைய தினம் ஈடுபட்டதாக தேவப்பிரதீபன் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தரவைக்கு ஏன் சென்றீர்கள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் கேள்வி எழுப்பியதுடன், செய்தி அறிக்கையிடுவதற்காக தாம் சென்றதாக  ஊடகவியலாளர் பதிலளித்துள்ளார்.

தரவையில் இடம்பெற்ற நிகழ்விற்கு யாரேனும் அழைத்தார்களா எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் வினவியுள்ளனர்.

வழமையான தரவையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதன் அடிப்படையில் தாம் செய்தி சேகரிப்பதற்காக சென்றதாக தேவப்பிரதீபன் பதில் அளித்துள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து மரணத்த உறவினர்கள் யாராவது தரவையில் புதைக்கப்பட்டுள்ளார்களா எனவும் இதற்கு முன்னரும் தரவை மாவீரர் நினைவேந்தலுக்கு சென்றுள்ளீர்களான எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டும் செய்தி அறிக்கையிடுவதற்காக தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தாம் சென்றிருந்ததாக  ஊடகவியலாளர் தேவப்பிரதீபன் பதில் அளித்துள்ளார்.

தரவையில் என்ன நடந்தது எனவும் விடுதலை புலிகள் அமைப்பில் போராடி மடிந்தவர்களா தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் வாழைச்சேனை குற்றப்புலனாய்வு பிரிவினர் வினவியுள்ளனர்.

தம்மை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான காரணம் குறித்து ஊடகவியலாளர் தேவப்பிரதீபன், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாரணை செய்யுமாறு தமக்கு மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனை குற்றப்புலனாய்வு பிரிவினர் பதில் அளித்துள்ளனர்.

அத்துடன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பாக விசாரணைகளுக்கு அழைப்பதை விடுத்து, வாகனப் பதிவு தொடர்பான விசாரணை என பொய்யான காரணத்தை கூறி ஏன் விசாரணைக்கு அழைத்தீர்கள் எனவும் தேவப்பிரதீபன் பதிலுக்கு வினவியுள்ளார்.

எனினும் குற்றப்புலனாய்வு பிரிவினர், தமது இந்த கேள்விக்கு பதிலளிக்காமல், மௌனம் காத்திருந்தனர் எனவும்  ஊடகவியலாளர் தேவப்பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை