அம்பாறை கல்முனை – இஸ்லாமாபாத் பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு கல்முனை பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
கல்முனை பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, சந்தேகத்தின் பேரில் குறித்த நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பாளரான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் ஒழுங்கீனமற்ற முறையில் செயற்பட்டதாகவும், அதனையடுத்து தாம் அவரை தாக்கியதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆலயமொன்றிலிருந்து விளக்குகளை திருடிய குற்றச்சாட்டில் கொக்குவில்பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி கல்முனை – இஸ்லாமாபாத் பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.
இந்தநிலையில், குறித்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் சிறுவன் ஒருவன் சுயநினைவின்றி இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 14 வயதுடைய சிறுவனின் சடலத்தை மீட்டனர். பின்னர், சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், தாக்குதலால் இடம்பெற்ற உட்புற காயங்கள் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சடலத்தை தாங்கிய சவப்பெட்டியுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் கொக்குவில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவனின் கைது தொடர்பில் கொக்குவில் பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.