ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் சார்ஜட்டின் மகன் கைது!திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று சனிக்கிழமை (02-12-2023) இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த இளைஞரை பைசல்நகர் பிரதான வீதியில் வைத்து சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 05 கிரேம் 400 மில்லிகிரேம் ஐஸ் போதைபொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா - மாஞ்சோலை வீதியில் வசித்து வருபவர் எனவும், ஹதரஸ்கொடுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சார்ஜன்ட்டின் 24 வயதுடைய மகன் எனவும் தெரியவருகிறது.

இவர், ஏற்கனவே ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்யும்போது குறித்த இடத்தில் இருந்து தப்பி ஓடியவர் என்பதும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைதான நபரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர், திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை