போலி துவாரகாவின் காணொளியை நிராகரித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!



தமிழீழத் தேசிய மாவீரர் நாளில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் மகள் துவாரகாவின் பெயரில் வெளியான காணொளியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

கிடைக்கப் பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், தமது அவதானங்களின் வழி நின்றும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமர் விசுவநாதன் ருத்ரகுமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவர்
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கிறோம்.



எனவே தான் அவரது மகளாக வேறு ஒருவரை முன்வைப்பது எங்கள் உள்ளங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றது.

பொது வெளியிலும், பொதுத்தளத்திலும் தமிழ் மக்கள் இவ்விடயத்தினை நிராகரித்திருந்தமை நம்பிக்கையினை தந்துள்ளதோடு, தகுந்த பதிலடியாகவும் அமைந்துள்ளது.



இதேவேளை, இவ்விவகாரத்தினை பேசுபொருளாக கொண்டு கையாளுகின்ற சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

'விழிப்பே அரசியலின் முதற்படி' என்ற தமிழீழத் தேசியத் தலைவரது வாக்கை நாம் அனைவரும் நினைவிருத்தி, தொடர்ந்தும் விழிப்புடன் செயற்படுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை