காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம்



மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.

இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான வீதியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் – காட்டு யானை தொல்லைக்கு தீர்வு கோரி
பிரதான வீதியை வழிமறித்து சுமார் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்து வேப்பவெட்டுவான் இலுப்படிச்சேனை சந்தி வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலுப்படிச்சேனை பிரதான வீதியால் பேரணியாக சென்றகொன்டிருந்தவேளை அவ்வழியால் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர்
திடீரென வருகை தந்ததை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர்.

தமக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருமாறும் காட்டு யானை தொல்லையில் இருந்து தம்மை விடுவிக்குமாறும் கோரிக்கை
விடுத்தனர்.

வேறு வேலையாக அவசரமாக செல்கிறோம் – வரும் போது உங்களை சந்திக்கிறோம் எனத்தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்கள வாகனம்
சென்றுவிட்டது.

இலுப்படிச்சேனை – வனஇலாகா அலுவலகம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள். வன இலாகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

இலுப்படிச்சேனை வன இலாகாவுக்கு சொந்தமான பகுதியான அரச காணியான தேக்கஞ்சோலை பகுதியினுள் காட்டு யானைகள் நிற்பதாகவும் -அக்காட்டினுள் உள்ள யானையை அங்கிருந்து விரட்டும் படியும், தேக்கஞ்சோலை சோலை காட்டுப்பகுதியை துப்பரவு செய்யக்கோரியும் கோரிக்கை விடுத்தனர்.

தமது கோரிக்கைக்கு பதில் கூறுமாறு அதிகாரிகளை அவர்கள் கோரிய போதும், அதிகாரிகள் எவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்திக்கவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் எந்த அதிகாரியும் வெளியே வரவில்லை. இதன் போது அங்கு வருகை தந்த கரடியனாறு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரை வனஇலாகா அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாட பொலீசார் அழைத்துச் சென்றனர்.

இதன்பின்னர் பொலிஸார் வழங்கிய வாக்குறுதிக்கமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
புதியது பழையவை