மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை காரணமாக 11525குடும்பங்கள் பாதிப்பு –பல பகுதிகளுக்கான போக்குவரத்தும் தடைமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரையில் 11525குடும்பங்களை சேர்ந்த 39038பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 73.0மில்லி மீற்றர் மழைவீழ்;ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய அதிகாரி சுப்ரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான் கதவுகள் ஊடாக தொடர்ந்து அதிகளவான வெள்ள நீர் வெளியேற்றப்பட்டுவருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியுடான போக்குவரத்துகள் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் சந்திப்பிள்ளையார் வீதியின் முன்பாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று வழியினால் போக்குவரத்துகளை முன்னெடுக்குமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளமான நவகிரி குளத்தின் வான் கதவுகள் சுமார் நான்கு அடிகள் திறக்கப்பட்டுள்ளதன காரணமாக மண்டூர்-வெல்லாவெளி பிரதான தொடர்ந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாலையடிவட்டை - வெல்லாவெளி பிரதான வீதியின் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் உன்னிச்சைகுளத்தின் மூன்று வான்கதவுகளும் எட்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக வவுணதீவு,பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் பெருமளவான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக ஏழு இடைத்தங்கள் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு 164 குடும்பங்களை சேர்ந்த 402 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும்  வழங்கும் பணிகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுத்துவருகின்றது.அத்துடன் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு படகுச்சேவைகள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஊடாக போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பணிப்புரைக்கு அமைவாக ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள சித்தாண்டி, சந்திவெளி,வந்தாறுமூலை,கொம்மாதுறை,செங்கலடி,ஏறாவூர் ஆகிய பகுதிகளில் இந்த வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் பற்குணம் அவர்களின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு தடைகளாகவுள்ள பகுதிகளில் தடைகளை அகற்றி வெள்ளம் வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதேநேரம் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணி, மிச்நகர்,மீராக்கேணி,ஐயங்கேணி,அஸ்ரப்நகர்,சம்சும் கிராமம் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் நகர் பிரதேசத்திற்குட்பட்ட 15 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பாதிப்படைந்துள்ளதுடன் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் நகர பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை