மட்டக்களப்பில் கடந்த 24மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி - பல பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில், 169.4 மில்லி மீற்றருக்கு அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான மழைபெய்துவருவதுடன், 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 169.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி ரமேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளமான உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வான்பாயும் நிலைமை காரணமாக குளத்தின் மூன்று வான்கதவுகளும் சுமார் ஆறு அடி திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நவகிரிகுளம், உன்னிச்சைகுளம், ரூகம் குளம், வாகனேரிகுளம் உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் ரங்கநாதன் தெரிவித்தார்.அத்துடன் போரதீவுப்பற்றின் பல பகுதிகளுடனான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி –மண்டூர் பிரதான வீதியில் பல இடங்களில் வெள்ள நீர் பாய்வதன் ஊடாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உழவு இயந்திரங்கள்
மூலம் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


வெல்லாவெளி-பாலையடிவட்டை வீதி, மண்டூர்-ராணமடு வீதி என்பனவும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதன் காரணமாக போக்குவரத்துகள் மேற்கொள்ளமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துச்செய்யமுடியாத பகுதிகளுக்கு போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதேநேரம் வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கல்லரிப்பு கிராமம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அங்கிருந்த 47குடும்பங்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் அருணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 490 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வாகரை பிரதேசத்தில் 47 குடும்பங்களும், ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் 443 குடும்பங்களும் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாக, தாழ்நிலங்களில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு திருகோணமலைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெருகல் பகுதியில் பிரதான வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை