வவுனியாவில் இருந்து மட்டக்களப்பிற்கு கஞ்சா கடத்தி சென்ற வியாபாரிகள் உட்பட 4 பேரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது சம்பவமானது நேற்று(22-01-2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் களுவாஞ்சிக்குடி கடற்கரையில் நேற்று மாலை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது அந்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு வியாபாரிகளிடம் வவுனியாவில் இருந்து மோட்டர்சைக்கிளில் கஞ்சாவை கடத்தி வந்த இருவர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை கண்காணித்த மாறு வேடத்தில் இருந்த பொலிஸார் சுற்றிவளைத்து மடக்கிபிடித்துள்ளனர்.
இதனையடுத்து 845 கிராம் கஞ்சா , போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் கூறியுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.