மட்டக்களப்பில் பட்டிப்பொங்கலன்று போராட்டத்தில் குதித்த பண்ணையாளர்கள்




மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக் காலங்களாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் பூர்வீக பகுதிகளான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மாடுகளை மேச்சலுக்கு விடும் தமிழ் பண்ணையாளர்கள் சில சிங்கள இனத்தவர்களால் அச்சுறுத்தபடுகின்றனர்.



அத்துமீறிய குடியேற்றவாசிகள்
அதேவேளை, பொறி வைத்து பிடித்து கால்நடைகளை வெட்டும் செயற்பாட்டிலும் அத்து மீறிய குடியேற்றவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் மேச்சலில் ஈடுபடும் மாடுகளை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யும் அட்டூழியங்களும் அரங்கேறி வருகின்றன.



இந்த அட்டூழியங்களுக்கும், காணி ஆக்கிரமிப்புக்கும் நீதி கோரி மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.





எனினும் இதற்கான நிரந்தர தீர்வினை வழங்க ரணில் அரசு தாமதித்து வருகிறது.



இந்தநிலையில், மக்களின் வாழ்வில் ஒன்றிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படும் பட்டிப் பொங்கலான இன்று(16-01-2024) பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் அட்டூழியங்களுக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.



குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மதத்தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
புதியது பழையவை