தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வெளியேறும் மண்ணெண்ணெய்



முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் வீடொன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் கடந்த மழை வெள்ளத்தினால் கிணறு வெள்ளநீரில் நிரம்பிய நிலையில் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக நேற்று (07-01-2024) கிணற்றினை நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள்.


இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணை கலந்து கொண்டிருப்பது கண்டறியப்பபட்டுள்ளதுடன் இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



இது தொடர்பில் காணி உரிமையாளர் கூறிய போது 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர் 23 அடி ஆழத்தில் குறித்த கிணறு தோண்டப்பட்டுள்ளது.

தற்போது கிணற்றினை சுத்தம் செய்யும் போது முதல் கருநிறத்தில் காணப்பட்டதோடு கிணற்று நீரில் பின்னர் மண்ணெண்ணைய் மணக்கத்தொடங்கியுள்ளது.


கிணற்று நீரின் மேற்படலம் மண்ணெண்ணையாக தொடர்ச்சியாக காணப்பட்ட நிலையில் அதில் ஒரு இலையினை நனைத்து அதனை பற்றவைத்தபோது அந்த இலை எரிந்துள்ளது.


இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் கிராம சேவையாளருக்கு தொடர்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளதுடன் கிராம சேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கிணற்றினை பார்வையிட்டுள்ளதுடன் கிணற்றின் எண்ணெய் கலந்த நீரின் மாதிரி எடுத்து சென்றுள்ளதுடன் இது தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு மேற்கொண்டு சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.


இதேவேளை இது குறித்து மேலும் அயலவர்களை விசாரித்தபோது காணிக்கு அருகில் விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்ட மண்ணெண்ணைய் வெளியேறி தற்போது நிலத்தடி நீரில் கசிந்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயரமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இறைத்து நீர்வரத்து பகுதியினை கண்டறியமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.


இதேவேளை தங்கள் குடிநீர் மற்றும் வீட்டுதேவைக்காக பயன்படுத்தி வந்த கிணற்றில் மண்ணெண்ணெய் கலந்ததால் குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கும் குழிப்பதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்த குடும்பம் தெரிவித்துள்ளார்கள்
புதியது பழையவை